*அதிகாரிகள் தகவல்
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே நுழைவு பாலங்களால் நீண்ட காலமாக நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு நகரில் கொல்லம்பாளையம், சென்னிமலை ரோடு, கே.கே.நகர் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளான பாசூர், சாவடிப்பாளையம், பெருந்துறை ஆர்எஸ் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்வே நுழைவுப் பாலங்கள் உள்ளன.
இவற்றில் மழைக்காலங்களில் ஈரோடு கொல்லம்பாளையம், கேகே நகர், சாவடிப்பாளையம், பாசூர், மற்றும் பெருந்துறை ஆர்எஸ் ரயில்வே நுழைவுப் பாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நீண்ட காலமாக நிலவி வரும் இப்பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என பொதுமக்களும், பல்வேறு சமூக நல அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்றுத்திட்டங்களை வகுத்து வருகின்றனர். அதன்படி, பிரச்னைக்குரிய பகுதிகளில் உயர்மட்ட பாலம் அமைத்தல் அல்லது நுழைவுப் பாலத்தையே அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு, காளை மாட்டு சிலை அருகில் உள்ள கொல்லம்பாளையம் நுழைவுப் பாலத்துக்கு மாற்றாக காளைமாட்டு சிலை முதல் கொல்லம்பாளையம், பூந்துறை ரோட்டில் உள்ள லோட்டஸ் உயர் மட்டப்பாலம் அமைப்பது குறித்து ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக, கோட்ட பொறியாளர் அலகு மூலமாக அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, சென்னிமலை ரோடு, கே.கே.நகர் ரயில்வே நுழைவுப் பாலத்தின் கீழ் அடிக்கடி தண்ணீர் தேங்குவது குறித்தும், அப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கவும் அந்த இடத்தில் 6.70 மீட்டர் அகலம், 5.50 மீட்டர் உயரமுள்ள வகையில் கூடுதலாக 2 கண்ணறை பாலங்கள், ரயில்வே துறை மூலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பணியை தென்னக ரயில்வே, சேலம் கோட்ட மேலாளர் ஏற்று கொண்டதன் அடிப்படையில் கூடுதலாக 2 கண்ணறை பாலங்கள் அமைக்கப்படும்.அதேபோல, வெண்டிபாளையம் ரயில்வே கேட் மேம்பாலத்துக்கு பன்னீர்செல்வம் பார்க் வரைலான விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டதும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல, பெருதுறை ஆர்.எஸ். முதல் வெள்ளோடு வரை பாலம் குறுகலாக உள்ளது. மேலும் இது ரயில்வே நீர் வழிப்பாலமாகவும் உள்ளது. எனவே அந்த இடத்தில் 6.70 மீட்டர் அகலம் 5.50 மீட்டர் உயரமுள்ள வகையில் கூடுதுலாக 2 கண்ணறை பாலங்கள், ரயில்வே துறை மூலமாக, அவர்களது நிதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவிர, ஈரோடு கரூர் சாலையிலுள்ள ஆரியங்காட்டுபள்ளம், கேட்டுபுதுார், சாவடிப்பாளையம் முதல் ஆர்.வி.பி. காட்டுப்பாளையம் வரையிலும் ரயில்வே துறை மூலமாக கூடுதலாக கண்ணறை பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், பாசூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில், பொது அமைப்பின் வரைபடத்துக்கு ரயில்வே துறை ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகளுக்கான முறையான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ரயில்வே நுழைவு பாலங்களில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை appeared first on Dinakaran.