சென்னை: பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி வகையில் முற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் அப் குழுக்களை தமிழக ரயில்வே போலீசார் தொடங்கியுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணியை கீழே தள்ளிய சம்பவம், அதேபோல் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசாரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இரவு 10 மணிக்கு பின்னர் புறப்படும் ரயில்களில் ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மின்சார ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகள், வேலை நிமித்தமாக தினமும் பயணிக்கும் பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பகுதி வாரியாக புதிய வாட்ஸ் அப் குழுவை தொடக்க ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.
பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய, இந்த வாட்ஸ் அப் குழு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவி, பயணத்தின் போது ஏற்படும் அச்சுறுத்தல்களை குழுவில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ரயில் நிலையங்கள், ரயில்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக 47 இடங்களில் வாட்ஸ் அப் குழு தொடக்கம் appeared first on Dinakaran.