தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்த சட்ட முன்வடிவினை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுகவும் பாஜகவும் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
தமிழ்நாட்டில் உள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடந்த கூட்டத் தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், சட்டமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச் சட்ட முன்வடிவினை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
பகல்கலைக்கழக நிர்வாகங்களில் குளறுபடி
இதுதொடர்பாக சில கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். அவர் பேசும்போது, “தமிழ்நாடு அரசின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வேந்தராக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் உள்ளனர். கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது, உயர்கல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்துவந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது” என்றார்.
நீதிபதி பூஞ்சி பரிந்துரைக்கு ஆதரவாக…
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டது. மேலும், “துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்” எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய அரசால் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்டபோது தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் ஆணையத்தின் அறிக்கையை எற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளன.
குஜராத்தில் உள்ளதுபோல…
மேலும், திமுக அரசு எனது தலைமையில் அமைந்ததும் பூஞ்சி ஆணைய பரிந்துரை தொடர்பாக மாநில அரசின் கருத்து கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அதனை ஏற்று துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் எப்படி நடக்கிறது எனப் பார்த்தபோது, குஜராத், ஆந்திரா, தெலங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். எனவே, பிரதமர் மோதி முதல்வராக இருந்த குஜராத்தில் உள்ளதுபோல தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவினை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
“அதிமுகவுக்கு நெருடல் இருக்க காரணமில்லை”
தொடர்ந்து, கடந்த ஜனவரியில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான திருத்தச் சட்டம் குறித்து உயர் கல்வி அமைச்சர் பேசியதை நினைவூட்டிய முதலமைச்சர், “அது நிறைவேறும் சூழலுக்கு வந்திருக்கிறது. குஜராத்தில் மாநில அரசுதான் துணைவேந்தர்களை நியமனம் செய்கிறது. 2017 அ.தி.மு.க ஆட்சியிலும் ஆணையத்தின் பரிந்துரையை ஆதரித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஆதரிப்பதில் அ.தி.மு.கவுக்கு நெருடல் இருக்க வாய்ப்பில்லை. இது மாநில அரசின் உரிமை மற்றும் கல்வி தொடர்பான பிரச்னை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமை. இதனை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
தொடக்க நிலையிலேயே எதிர்க்கிறோம் – அதிமுக
இதையடுத்து, “சட்டமுன்வடிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என அமைச்சர் பொன்முடி தெரிவிக்க, அவை முன்னவர் துரைமுருகன் வழிமொழிந்தார். இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்தது. தொடக்க நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான அன்பழகன் தெரிவித்தார்.
இதையடுத்து, சட்ட முன்வடிவினை ஆதரித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “மாநில அரசுகள் இழந்து வரும் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவை வரவேற்கிறோம். குஜராத், கர்நாடகா, தெலங்கனா ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போல மாநில முதல்வரின் உத்தரவுக்கேற்ப அமைச்சர் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டைச் சாராத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கடந்த காலங்களில் துணைவேந்தர்களாக கொண்டு வந்தனர். வரும் நாள்களில் வேந்தர் என்ற இடத்தில் முதலமைச்சர் பெயர் இடம்பெற வேண்டும்” என்றார்.
அடுத்துப் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “பொறுமைக்கும் ஓர் அளவு இருக்கிறது. அண்ணா காலத்தில் இருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆளுநர் பிரச்னை என்பது இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை என்பது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு என்பதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு சட்டமன்றங்களில் சட்டம் நிறைவேற்றியுள்ளனர். ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்துள்ள முடிவு என்பது அத்தனை மாநிலங்களும் பயன் தருவதாக அமையும்” என்றார்.
“கடந்த அ.தி.மு.க அரசு பூஞ்சி ஆணையத்தின் அறிக்கையை ஏற்றது என்பதை முதல்வர் பதிவு செய்தார். வேந்தர் என்ற முறையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் முரண்பாடுகளும் சர்ச்சையும் இருக்கும் என்பதை ஆணையம் தெரிவித்திருந்தது. அதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கு பெறாத வகையில் இன்று ஆளுநரே ஊட்டியில் ஒரு கூட்டத்தை நடத்துகிறார் என்றால், பூஞ்சி ஆணையம் கூறியது சரிதான் என்பது தெளிவாகிறது. வரும் நாள்களில் மருத்துவம், கால்நடை, விவசாயம் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
வேந்தர் என்ற சொல்லை மாற்ற வேண்டும் – சிபிஎம்
சி.பி.எம் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில், “வேந்தர் என்ற சொல்லுக்குப் பதிலாக அரசு என மாற்றியமைக்கப்பட வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தைப் பறித்து முதல்வருக்கு வழங்கும் இந்த சட்ட முன்வடிவினை ஆதரிக்கிறோம்” என்றார்.
அடுத்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சிந்தனைச் செல்வன், “கடந்த 18 ஆம் தேதி முதல்வர் அளித்த அறிக்கையில், ஆளுநர் என்ற முறையில் அந்தப் பதவிக்கு மரியாதை அளிக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஊட்டியில் ஆளுநருக்கு ஒரு மாளிகை தரப்படுவதாக அறிகிறோம். கிண்டியில் தனியாக ஒரு மாளிகை ஆளுநருக்கென்று உள்ளது. அவற்றுக்குப் பதிலாக அமைச்சர் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு வீடு ஒதுக்க வேண்டும்” என்றார். மேலும், “துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இரூக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் மாண்பு என்பது அதில்தான் உள்ளது. கடந்த காலங்களில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் குறித்தும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
“2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக திருத்தச் சட்டம் என்ற பெயரில் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இதர 12 துணைவேந்தர்கள் தமிழ்நாடு அரசால் நியமிக்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். புதிய ஆராய்ச்சிகள், ஆய்வு, மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. கடந்த காலங்களில் மாநில அரசுடன் கலந்தாலோசித்து துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். தற்போது அரசு கொண்டு வந்துள்ள சட்ட முன் வடிவினை ஆதரிக்கிறோம்” என்றார்.
பாமக ஆதரவு
மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரும், இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருக்கவேண்டும். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கவேண்டும். இந்த சட்டமுன்வடிவை பாமக 100 சதவீதம் ஆதரிக்கிறது என்றார் அந்தக் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி.