இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ அவரின் ரஷ்ய பயணம்தான் காரணம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டு வருகிறது. அதாவது அவரின் ரஷ்ய பயணத்தை விரும்பாமல் அமெரிக்காவின் உதவியுடன் இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு இன்று அதிகாலை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்தது. இதில் இம்ரான் கானின் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது.அங்கு மொத்தம் 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர் என்பதால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு 174 எம்பிக்கள் உள்ளதால் அவர்கள் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களித்தனர்.
ரஷ்யா இம்ரான் கான் பதவி காலியாக அந்நாட்டு பொருளாதாரம் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. அதேபோல் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா உடன் ஏற்பட்ட மோதலும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அமெரிக்கா தனது ராஜாங்க வலிமையை பயன்படுத்தி பாகிஸ்தானின் எதிர்க்கட்சி மற்றும் ராணுவத்தின் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியை காலி செய்து இருக்கலாம் என்றும் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இம்ரான் கானின் சமீபத்திய ரஷ்ய பயணம்தான் அமெரிக்கா – இம்ரான் இடையிலான மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சர்ச்சை கடந்த பிப்ரவரி 24ம் தேதி பாகிஸ்தான் இம்ரான் கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அதிபர் புடினை இம்ரான் சந்தித்தார். இந்த சந்திப்பை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு இம்ரான் கானின் இந்த பயணத்தை அமெரிக்கா தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுவே அங்கு ஆட்சி கவிழவும் காரணமாக அமைந்ததாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகாரை வைப்பதே இம்ரான் கான்தான்.
இம்ரான் கான் புகார்
முதலில் தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று கூறிய இம்ரான் கான்.. பின்னர் அமெரிக்கா இல்லை.. ஒரு நாடு எனக்கு எதிராக சதி செய்கிறது என்று கூறினார். ஆனால் அதன்பின் வெளிப்படையாக அமெரிக்கா மீது இம்ரான் கான் நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்தார். அமெரிக்க அரசு தன்னை ஆட்சியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாகவும். தன்னுடைய வெளியுறவுக்கொள்கை பிடிக்காமல் தன்னை வெளிநாட்டு அரசு ஒன்று ஆட்சியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக அவர் கூறினார்.
கோர்ட்டில் சமர்ப்பிப்பேன்
முக்கியமாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரத்துறை அதிகாரி டொனால்ட் லியு நேரடியாக தன்னை நேரடியாக மிரட்டியதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரி மூலம் தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி நடந்ததாக அவர் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் வழங்குவேன். கோர்ட்டில் இந்த ஆதாரங்களை அளிப்பேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்ன சொன்னார்?
அதேபோல் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இதை தகவலை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமெரிக்காதான் இம்ரான் கானுக்கு எதிராக சதி செய்தது. அவரின் ரஷ்ய பயணத்தை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த பயணத்தை மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை எங்கள் வெளியுறவுத்துறையிடம் தெரிவித்தது. ஆனால் எங்கள் வெளியுறவுக்கொள்கையை நாங்கள்தான் தீர்மானிக்க முடியும்.
பாகிஸ்தானை தடுக்க பார்த்தனர்
அமெரிக்கா சொல்வதற்காக எங்களின் வெளியுறவுக்கொள்கையை நாங்கள் மாற்ற முடியாது. ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையை எங்காவது வேறு ஒரு நாடு தீர்மானிக்குமா? பின்னர் ஏன் பாகிஸ்தானை மட்டும் கட்டுப்படுத்த பார்க்கிறார்கள். இந்தியாவிடம் அமெரிக்காவால் இது போல நடந்து கொள்ள முடியுமா என்று அவர் கோபமாக கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது பாகிஸ்தானில் இம்ரான் ஆட்சி கவிழ அமெரிக்கா தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மறுப்பு
ஆனால் அமெரிக்கா இதை மறுத்துள்ளது. , பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் எந்த உண்மையில் இல்லை. பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்களை கவனித்து வருகிறோம். பாகிஸ்தான் நாட்டில் சட்ட ரீதியாக நடக்கும் விஷயங்களை ஆதரிக்கிறோம். அவர்கள் சட்டத்தை பின்பற்றி செய்யும் விஷயங்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.