‘போரில் வென்றால், போரை வென்றதாகாது!” என்றார் எர்னஸ்ட் ஹெம்மிங்வே. ஆனால், போரில் வெல்வதுதான் தனது பராக்கிரமத்தை உறுதிப்படுத்தும் என்பதே உலக நாடுகளின் புரிதலாக இருக்கிறதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆங்காங்கே போர். ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுப் போர், அலைகள் போல் ஓய்வதே இல்லை. அதனால் அவை எப்போதும் பெரிதாக ஊடக வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஆனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் என்றால், இந்திய – சீன எல்லையில் பதற்றம் என்றால், ரஷ்யா – உக்ரைன் மோதல் வலுத்தால் மூன்றாம் உலகம் போரை நெருங்குகிறோமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்வது இயல்பாகிறது.
சென்னையில் தங்கம் விலை உயர்ந்தால் அதற்கான காரணங்களில் உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர்ந்து தங்கத்தை தேர்வு செய்வதும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்தால், பெரும்பாலும் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை நம்பியிருப்பதால் உக்ரைன் போரும் ஒருக் காரணம் எனக் கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கினால் அது ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படுகிறது.