இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ரஷ்யா கூறுவதை நம்ப வேண்டாம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர்த் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இரு நாடுகளுடனும் கருங்கடல் எல்லையை பகிர்ந்து வரும் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இஸ்தான்புல் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உக்ரைன் வேறு நாடுகளுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற ரஷ்யாவின் நிலைப்பாட்டை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் கீவ் அருகே செர்னிவ் பகுதியில் எங்களது படைகளை குறைக்க உள்ளோம் என்றார். அதனால் கீவ் மற்றும் செர்னிவ் நகரங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.