புதுடெல்லி: ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் உள்ள இந்தியர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 16 பேர் மாயமாகி உள்ளனர். இந்த தகவலை இந்திய அரசிடம் ரஷ்யா தெரிவித்துள்ளது.
“ரஷ்ய நாட்டு ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியில் இருந்தனர். அதில் 96 பேரை ரஷ்யா பணியில் இருந்து விடுவித்தது. அவர்கள் எல்லோரும் தாயகம் திரும்பி உள்ளனர். 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 18 பேர் இன்னும் அங்கு ராணுவ பணியில் உள்ளனர். அதில் 16 பேர் எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அப்படித்தான் ரஷ்யா எங்களிடம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து, தாயகம் திரும்புவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.