சோனேபட்: அரியானாவில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் பெண் நிர்வாகியின் சடலம் சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அரியானா மாநிலம் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே மர்ம சூட்கேஷ் கண்டெடுக்கப்பட்டது. அந்த சூட்கேஷை உடைத்து பார்த்த போது அதனுள் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மர்ம சூட்கேஷில் கைப்பற்றப்பட்ட பெண் குறித்த முதற்கட்ட விசாரணையில், அவர் அரியானா மாநிலம் சோனேபட் அடுத்த கதுரா கிராமத்தைச் சேர்ந்த ஹிமானி நர்வால் (22) என்பது உறுதி செய்யப்பட்டது. அரியானா காங்கிரஸ் கட்சியின் கிராமபுற மாவட்ட துணைத் தலைவரான அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றவர் ஆவார். மேலும் ரோஹ்தக் எம்பி தீபேந்தர் ஹூடாவுடன் பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார். நாட்டுப்புற கலைஞர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். சாம்ப்லா பேருந்து நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கிடந்த மர்ம சூட்கேஸை பயணிகள் கவனித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் திறந்தபோது, நர்வாலின் கழுத்தில் காயங்களுடன் உடல் மீட்கப்பட்டது. அநேகமாக அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். தடயவியல் குழுவினர் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பலாத்காரம் செய்து ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோத கொலையா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பாரத் பூஷண் பத்ரா கூறுகையில், ‘சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்’ என்றார். அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், ‘மாநில பாஜக அரசில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
The post ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றவர்; சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட காங்கிரஸ் இளம்பெண் நிர்வாகியின் சடலம் மீட்பு appeared first on Dinakaran.