புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன், சபாநாயகருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஹிபி ஈடன் எழுதிய கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மிக மோசமான துரோகி என மக்களவை உறுப்பினரான சம்பித் பத்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது ராகுல் காந்தியை அவமதிக்கக்கூடியது. மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். இதன்மூலம் அவர் சட்ட விதிகளை மீறியுள்ளார். எனவே சம்பித் பத்ராவுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி, உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.