புதுடெல்லி: நாகாலாந்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஃபங்க்னான் கொன்யாக் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் படிக்கட்டுக்கு கீழே வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை நோக்கி மிக நெருக்கமாக வந்து உரக்க கோஷமிட ஆரம்பித்தார். அவரின் இந்த செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
எனது கண்ணியம் மற்றும் சுயமரியாதையை ராகுல் ஆழமாக காயப்படுத்தியுள்ளார். பழங்குடியின பெண் எம்.பி.யான எனக்கு அவரின் இந்த நடவடிக்கை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நான் மனமுடைந்துவிட்டேன். எனவே, நாடாளுமன்ற வளாகத்தில் பெண் எம்.பி.க்களுக்கு தகுந்த பாதுகாப்பை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பான நோட்டீஸை ஏற்கெனவே உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.