வாஷிங்டன்: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால் 9 மாதமாகியும் அவர்கள் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதும் சுனிதா வில்லியம்ஸை மீட்க எலான் மஸ்க்குக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்தன. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர், எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் 16ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்திருந்தது. ஆனால் அவர்கள் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.18 மணிக்கு புளோரிடாவில் இருந்து டிராகன் விண்கலத்துடன் சீறி பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்த பிறகு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் appeared first on Dinakaran.