ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவல் நிலையம் உள்ளது. நள்ளிரவு முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர் மற்றும் பொதுமக்கள் அமரும் இடத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்து கரும்புகை சூழ்ந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பொருட்களுக்கோ, ஆட்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதேபோல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பஜார் வீதியில் உள்ள அரிசிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி விவேகானந்த சுக்லா சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைத்தும் உத்தரவிட்டார்.
சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும் 2 தனிப்படை போலீசார் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தனித்தனியே விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இன்று மாலை, குண்டு வீசிய நபர் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் குண்டு வீசிய ஹரி என்பவரை பிடிக்க சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் சென்றுள்ளார். அப்போது போலீசார் பிடிக்க முயன்றபோது சிப்காட் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் தாக்க ஹரி முயற்சி செய்துள்ளார்.
வேறுவழியின்றி உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தற்காப்புக்காக ஹரியின் கால் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஹரிக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹரி தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ. முத்தீஸ்வரனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
The post ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஹரி என்பவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.