*மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அது மேலும் மேற்கு -தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவே வலுவிழந்து வருகிறது.
அதன் காரணமாக வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மேக மூட்டத்துடன் பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் காலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தப்படி சென்றன. வேலைக்கு செல்பவர்கள் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தபடி நடந்தும் மற்றும் பைக்குகள் மூலம் சென்றனர்.
மாவட்டத்தில் விட்டு, விட்டு சாரல் மழை முதல் மிதமான மழை பெய்ததால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிற்பகல் வெயில் காய்ந்தபடியும், வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது.ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதலில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த திடீர் மழையால் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட கம்பெனிகளுக்கு வேலைக்குச் சென்ற ஆண் மற்றும் தொழிலாளர்கள், டியூஷன் சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
மேலும் தற்போது பஸ்நிலையம் புதிதாக கட்டுவதற்காக இடிக்கப்பட்டுள்ளதால் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மழையில் நனைத்தபடி நின்று பஸ் வந்த பிறகு ஏறிச் சென்றனர். இதேபோல் காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 மணிநேரம் குளிர் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் குளிர் காற்றுடன் கொட்டிய கனமழை appeared first on Dinakaran.