*கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
ராணிப்பேட்டை : நகரிகுப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் 400க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வீணாகி வருவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
டிஆர்ஓ சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கீதாலட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, கலால் உதவி ஆணையர் ராஜ்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் ஆகியோரும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இக்கூட்டத்தில் தக்கோலம் எஸ்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நகரிகுப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்தோம். ஆனால், எங்களது 400க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலைய வாசலில் காக்க வைத்துள்ளனர்.
எங்களுக்கு பின்பு அறுவடை செய்தவர்கள் 20க்கும் மேற்பட்டோரின் நெல் மூட்டைகளை வாங்கிக்கொண்டனர். ஆனால், எங்களின் நெல் மூட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை.
தற்போது கலெக்டரின் உத்தரவின் பேரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடுவதாக தெரிவித்தனர். மழையிலும் வெயிலிலும் பாதுகாத்து நாங்கள் அறுவடை செய்த நெல் வெயிலில் உள்ளது. 25 நாட்களுக்கு மேலாக இருப்பதால் அடுத்து ஒரு மழை பெய்தாலும் நெல் முளைவிட்டுவிடும். கடன்பட்டு விவசாயம் செய்த நாங்கள் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் உள்ளோம். எங்களது நெல் மூட்டைகளை வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. திமிரி பகுதியை சேர்ந்த பெண் அளித்த மனுவில், எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நான் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது, எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பல இடங்களில் மருத்துவ பார்ப்பதற்கு செலவு செய்ய முடியாமல் தவிக்கிறேன். எனவே, மருத்துவம் செய்து கொள்ள உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
நெமிலி வட்டம் திருமால்பூர் அண்ணா நகரை சேர்ந்த துரைராஜ் என்பவர் அளித்த மனுவில், எங்களது கிராமத்தில் நெசவுத்தொழில், விவசாயம் செய்து வருகிறோம். எங்களது பகுதியில் இருந்து காஞ்சிபுரம் சென்று வருவதற்கும், ஆற்காடு பகுதிக்கு சென்று வருவதற்கும் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் சென்று வர குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, திருமால்பூர் பகுதியில் இருந்து ஆற்காடு மற்றும் காஞ்சிபுரம் சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர்.இலுப்பைதண்டலம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியின் வளர்ச்சிக்காக புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பஞ்சாயத்து ஆக்கிரமிப்பு மற்றும் கோயில் ஆக்கிரமிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்த கலெக்டரிடம் தெரிவித்து வருகிறேன். தற்போது பள்ளி பராமரித்து வந்த இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கான பணியை தொடங்கி உள்ளனர். இதேபோல் பஞ்சாயத்திற்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியையும் செய்துள்ளனர்.
இது பள்ளியின் வளர்ச்சியை கெடுப்பதற்கான நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே பஞ்சாயத்து அலுவலகம் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது அல்லது வேறொரு இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியை தர வேண்டும். பள்ளிக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஊன்றுகோல் கேட்டு விண்ணப்பித்த திமிரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஊன்றுகோலை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். மேலும், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பொதுபிரச்னைகள் குறித்து மொத்தம் 316 மனுக்கள் வரப்பெற்றன.
The post ராணிப்பேட்டை மாவட்டம் நகரிகுப்பம் கொள்முதல் நிலைய வாசலில் வீணாகி வரும் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.