மாண்டலே: ராணுவ ஆட்சி, உள்நாட்டு போரால் மியான்மரில் மந்தகதியில் மீட்பு பணிகள் நடக்கின்றன. இதனால் அகற்றப்படாத அழுகிய சடலங்களின் துர்நாற்றம் தெருக்களில் வீசத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே, நேற்று மீண்டும் 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மியான்மர் மக்களை பீதிக்குள்ளாக்கியது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் கடந்த 28ம் தேதி 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
மியான்மரின் மாண்டலே அருகே மையம் கொண்டு தாக்கிய இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது. 3,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. அங்கு மீட்புப்பணிகளுக்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன.
ஆனாலும், மியான்மரில் ராணுவ ஆட்சி, உள்நாட்டு போரால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மிகவும் மந்தகதியில் நடக்கின்றன. தலைநகர் நேபிடாவில் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளில் பணியாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவர்களாகவே தங்கள் குடும்பத்தினரை மீட்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 41 டிகிரி கொளுத்தும் வெயிலில் பல இடங்களில் மக்களே வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகளை செய்தனர். மீட்பு பணிகளை பொறுத்த வரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்த 24 மணி நேரம் முக்கியமானவை. அதற்குள் கட்டிட இடிபாடுகளை அகற்றினால் மட்டுமே சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியும். 2 நாளை தாண்டினால் உயிர் பிழைப்பது கடினம்.
எனவே மாண்டலேவின் பல தெருக்களில் அழுகிய சடலங்களின் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கிறது. அங்கு 15 லட்சம் மக்களில் பலரும் வீடுகளை இழந்து தெருவிலேயே இரவை கழித்தனர். பல நாடுகள் உதவிப் பொருட்களை அனுப்பினாலும் அவை மக்களை சென்றடையவில்லை. இன்னும் பல பகுதிகளுக்கு மீட்பு பணிகள் சென்றடையவில்லை. மேலும், பல பகுதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள போராளிகள் வசம் இருப்பதால் அங்குள்ள நிலைமைகள் எதுவும் தெரியவில்லை. அப்பகுதிகளை சென்றடைவதே முடியாததாக உள்ளது.
தலைநகர் நேபிடாவில் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளதால் உள்நாட்டு விமான சேவை தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலவுகிறது. இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் மாண்டலேவில் மக்கள் அவதிப்படுகின்றனர். மருத்துவமனைகளில் பலர் குவிந்த நிலையில், கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மயக்க மருந்து, மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை கூட பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இதற்கிடையே, நிலநடுக்கத்தை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பல நில அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று 5.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மாண்டலே மக்கள் பீதிக்குள்ளாகி அலறினர். இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மந்தமான மீட்பு, நிவாரணப் பணிகள் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பல லட்சம் மக்கள் உதவி கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மியான்மர் ராணுவம், உள்நாட்டு போராளிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வெடிகுண்டுகளை வீசி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக சண்டையிடும் பிடிஎப் படையினர் மீட்பு பணிக்காக 2 வார போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. மேலும், உலக நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் தற்போது மியான்மரை சென்றடையதொடங்கி உள்ளன. அவற்றின் மூலம் உதவி நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
தாய்லாந்தில் பலி 18 ஆக அதிகரிப்பு
தாய்லாந்து நாட்டில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டாலும் அங்கு பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது. பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 83 பேரின் கதி என்னவெனத் தெரியவில்லை.
5 ராணுவ விமானங்களில் இந்திய நிவாரணங்கள்
நிலநடுக்கத்தால் பாதித்த அண்டை நாடான மியான்மருக்கு இந்தியா ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் மூலம் உடனடியாக உதவிக்கரம் நீட்டி உள்ளது. ராணுவ விமானங்கள் மூலம் மியான்மர், தாய்லாந்துக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 சி-17 விமானங்கள் மூலம் 120 சுகாதார பணியாளர்கள் கொண்ட ராணுவ மருத்துவமனை குழு மியான்மரை சென்றடைந்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்களும் உள்ளனர். அதோடு 60 டன் நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. இன்று மேலும் 5 ராணுவ விமானங்கள் மியான்மரை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மியான்மர் சென்றடைந்த ராணுவத்தின் சிறப்பு மீட்புக்குழுவினர் பல்வேறு இடங்களில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 2 கடற்படை கப்பல்கள் மூலம் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட 40 டன் உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
The post ராணுவ ஆட்சி, உள்நாட்டு போரால் மந்தகதியில் மீட்பு பணிகள் மியான்மரில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மாண்டலே நகரில் மக்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.