பாங்காங்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடப்பதால், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பான உண்மை நிலவரம் மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை மியான்மரில் 10,000 பேர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று முன்தினம் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மியான்மரில் உள்ள சகாயிங்கின் வடமேற்கில் பிற்பகல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில நிமிட இடைவெளியிலேயே 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நில அதிர்வும் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. மியான்மரின் பெரும்பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பாலங்கள் இடிந்து விழுந்தன, சாலைகள் விரிசல் அடைந்தன. நிலநடுக்கத்தின் பேரழிவு தாய்லாந்து வரை பரவியது. பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து பலரின் உயிரைப் பறித்தது. கடந்த நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றான இந்த நிலநடுக்கம், விமான நிலையங்களையும் ஸ்தம்பிக்க வைத்தது.
மியான்மரின் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, குறைந்தது 2,900 கட்டமைப்புகள், 30 நெடுஞ்சாலைகள் மற்றும் ஏழு பாலங்கள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டன. நய்பிடாவில் உள்ள விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்ததால், அதை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் சேவையின் முன்கணிப்பு மாதிரியாக்கம், மியான்மரின் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களை விமானங்கள் மூலம் அனுப்பி உள்ளன. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அரக்கான் படை என்ற கிளர்ச்சிப் படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பகுதிகளை அரக்கான் படை நிர்வகித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே தீவிரமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக மியான்மரின் ராணுவ நிர்வாகம், வெளிநாடுகளின் உதவியை கோருவது கிடையாது. நிலநடுக்க பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால் முதல்முறையாக மியான்மர் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹலாங், சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக உதவி கோரி உள்ளார். ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், நிலநடுக்கத்தால் மியான்மரில் 139 பேர் மாயமானதாகவும், 1,644 பேர் இறந்துள்ளதாகவும், 3,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான பலி எண்ணிகை அதிகம் என்று பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ராணுவ ஆட்சியின் கீழ் நிர்வாகம் செயல்படுவதால், உண்மையான விபரங்கள் மறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மியான்மரின் மண்டலே, சாகைங், நய்பிடாவ், பாகோ பகுதிகளில் அமைந்திருக்கும் பகோடாக்கள், புத்த கோவில்கள், மடாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மியான்மர், தாய்லாந்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மியான்மரை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை இருக்க வாய்ப்புள்ளது. மியான்மரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 70 சதவீதம் வரை சரியும். மியான்மர் ராணுவ ஆட்சி தலைமை, அந்நாட்டின் இணைய தளங்களை பலமுறை முடக்கியுள்ளது. இதனால் மொத்த சேதத்தின் முழு அளவையும் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும். மியான்மரில் நேற்று முன்தினம் மட்டும் மூன்று நிலநடுக்கங்கள் நடந்துள்ளன.
கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெறும் நிலையில், தற்போது மனிதாபிமான கடும் நெருக்கடியை மியான்மர் சந்தித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பலநாடுகளும் உதவிக்கரம் செய்து வருகின்றன. இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் விமானப்படையின் இரண்டு சி – 17 ரக விமானங்களில் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ராணுவ மருத்துவமனை குழுவினர் 118 பேரும் அவற்றில் புறப்பட்டுச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராணுவ ஆட்சி நடப்பதால் உண்மை நிலவரம் மறைக்கப்படுவதாக புகார்; நிலநடுக்கத்தால் மியான்மரில் 10,000 பேர் பலி?: அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பகீர் தகவல் appeared first on Dinakaran.