பாமக சிறப்பு பொதுக்குழுவில் இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கட்சியில் இருக்க இஷ்டம் இல்லாதவர்கள் கிளம்பலாம்; இது நான் தொடங்கிய கட்சி’ என ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து, தனிக் கட்சி அலுவலகம் தொடங்குவதாக அன்புமணி அறிவித்தார்.
புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் நேற்று பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் அன்புமணி பேசிய பின்னர், ஏற்கெனவே பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் மீண்டும் பேசத் தொடங்கினார். "நான் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும் என கட்சித் தலைவர் அன்புமணிக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதற்காக பாமக மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவிக்கிறேன். அவர் எல்லா வகையிலும் அன்புமணிக்கு உதவியாக இருப்பார். முகுந்தன் இன்று முதல் இப்பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்” என்றார்