திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 224 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,977 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 22.5.2024ல் துவங்கிய கட்டுமானப் பணி, இரண்டு கட்டங்களாக முடியும். முதற்கட்டப் பணிகள் சீராக நடந்து வருகின்றன. முதற்கட்டப் பணிகள் தொடக்க தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025, ஜனவரி நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, ஒட்டுமொத்தமாக கட்டுமானத்தில் 14.5 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரத்திலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அதன் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
The post ராமநாதபுரத்தில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி டிசம்பரில் மதுரைக்கு மாற்றம்: நிர்வாக இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.