ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்த கூடிய, பார்மலின் மருந்து தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடல்வள மீன்பிடித் தொழிலின் மையமாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இத்தீவை சுற்றிலும் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் கடலில் பிடித்து வரப்படும் பலவகையான மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோக உள்ளூர் மக்களின் கடல் உணவு தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
ராமேஸ்வரம் தீவை மையப்படுத்தி கரை வலை, ஓலை வலை, அரச வலை, பாய்ச்ச வலை, வழிவலை முறையிலும், வல்லம், வத்தை, கட்டு மரங்களிலும் பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடித்தொழில் தொழில் செய்கின்றனர். இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் மூலமும் இக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கடலில் இருந்து மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்கள் பெரும்பாலும் வெளி விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் நிலையில். அன்றாடம் கரை வலை மூலம் பிடித்து வரப்படும் மீன்களே உள்ளூர் மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது. அதிகாலையில் கடலுக்கு சென்று பிடித்து வரப்படும் கரைவலை மீன்கள் ஐஸ் கட்டிகளால் பதப்படுத்தப்படாமல் கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும் அதிக சுவையாகவும் இருக்கும் என்பதால், இவ்வகை மீன்களுக்கு உள்ளூர் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
கரை வலையினால் பிடித்து வரப்படும் மீன்கள் பெரும்பாலும் உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிடும். விலையும் அதிகமாக இருக்கும். கரைவலை மீன்கள் கிடைக்காத பட்சத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களை மக்கள் வாங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் தற்போது உள்ளூர் மார்க்கெட்டில் கரை வலை மீன்களுடன், இயந்திர படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களும் கலந்து விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் பல நாட்கள் ஸ்டாக் வைக்கப்பட்ட மீன்களும் மார்க்கெட்டிலும், தெருக்களிலும் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுகிறது.
பல நாட்கள் ஸ்டாக்கில் இருக்கும் இவ்வகை மீன்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் கலவை மருந்து பவுடர் மற்றும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்த படுவதாகவும் கூறப்படுகிறது. மீன்கள் மீது இதுபோன்ற மருந்துகள் பிரயோகப்படுத்துதலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால், இது தெரியாமல் மக்கள் இம்மீன்களை வாங்கி சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பார்மலின் ரசாயன கலவைக்குட்பட்ட மீன்களை சாப்பிட்டால், வயிற்று கோளாறுகள் ஏற்படும். நாள்பட சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகளும் உருவாகும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. உயிரற்ற விலங்கு மற்றும் மீன்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் மருந்து உடலுக்குள் செலுத்துதல், உடலின் மேல் தெளித்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் இவைகள் பார்ப்பதற்கு ப்ரஸ்சாக இருப்பது போன்ற தோற்றமளிக்கிறது. ஆனால் மீன்களின் விறைப்புத்தன்மை, கண்கள், மீன் செவுள் இவற்றை பார்த்து ஓரளவிற்கு இதனை தெரிந்து கொள்ளலாம். ஆனால் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது மீனவர்களால் மட்டுமே இது சாத்தியம். நம்பிக்கையில் காசு கொடுத்து மீன் வாங்கும் சாமானிய மக்களுக்கு இது சாத்தியம் இல்லை. ராமேஸ்வரம் பகுதியில் இதுபோன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் நிலையில், மீனவர்கள் மத்தியில் இந்த விசயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் எல்லோராலும் தினசரி மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க முடியாத நிலையில், வீதியில் விற்பனை செய்யப்படும் மீன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் புயல், பலத்த காற்று காலங்களில் மீனவர்கள் பல நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், வீடுகளுக்குள் முடங்கினாலும் ப்ரஸ்சான மீன்கள் வீதிகளில் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மீனவர் எவரும் மீன்பிடிக்க செல்லாத போது மீன்கள் கிடைப்பது எப்படி என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் மீன், கருவாடு கம்பெனிகள் பலவும் உள்ளது. இங்கிருந்து மீன்களும், உலர் மீன்களும் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. மீன் விலை குறைந்த நாட்கள் மற்றும் விற்பனை மந்தமான நாட்களில் இங்குள்ள மீன்கள் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. அல்லது உலர வைக்கப்பட்டு கருவாடாக வெளியூருக்கு அனுப்பப்படுகிறது. இதெல்லாம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது தான். ஆனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நாட்களில், தெருக்களில் விற்பனை செய்யப்படும் மீன்கள் எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதனால் தெருக்களில் விற்பனை செய்யப்படும் மீன்களை, பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும். அது ரசாயனம் தடவிய மீன்களாக என கண்டறிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி குழு நடவடிக்கை எடுக்குமா?
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வவ்போது திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தாலும் ரசாயன மருந்து கலவை பூசப்பட்ட மீன்கள் விற்பனை என்பது மற்ற பகுதிகளில் இருந்தாலும் ராமேஸ்வரம் பகுதியிலும் நடக்கிறது. சாப்பிடும் விசயத்தில் இதுபோன்ற தவறான விசயங்கள் மக்கள் மத்தியில் பேசப்படும் போது, இதனை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. மக்கள் பணம் கொடுத்து நோயை வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. ஆகையால் இதன் உண்மைத்தன்மையை உணவு பாதுகாப்பு மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post ராமேஸ்வரம் பகுதிகளிலேயே பார்மலின் தடவிய மீன்களின் விற்பனை ஜோர்: அதிகாரிகளின் அதிரடி ஆய்வு அவசியம் appeared first on Dinakaran.