பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப். 6-ம் தேதி ராமநவமியன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் நடக்கும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் 2019 மார்ச் 1-ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.535 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகளை கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வுசெய்து, சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அவர் சுட்டிக்காட்டிய பணிகள் சரி செய்யப்பட்டன.