சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு , இராயபுரத்தில் உள்ள கால்நடை காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கால்நடை காப்பகங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இராயபுரம் மண்டலம், வார்டு-53க்குட்பட்ட பேசின் பிரிட்ஜ் சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கால்நடை காப்பகமானது தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 11.06.2025 அன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.
பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இராயபுரம் கால்நடை காப்பகத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (30.06.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கால்நடை உரிமையாளர்களுக்கு பால் பாத்திரங்கள் மற்றும் கால்நடைகளுக்கு பசுங்கீரைகள் மற்றும் உணவுத் தீவனங்களை வழங்கினார்.
இந்தக் கால்நடை காப்பகத்தில் மேலும் கூடுதலாக கால்நடைகளைப் பராமரிக்கும் வகையில் இந்தக் காப்பகத்தினை விரிவுபடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கூடுதல் கண்காணிப்புடன் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்தக் கால்நடை காப்பகத்தில் தற்போது 210 கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10/- பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (இராயபுரம்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், (மத்தியம்), அஃதாப் ரசூல், (தெற்கு), நிலைக்குழுத் தலைவர் (நகரமைப்பு) தா.இளைய அருணா, மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் பா. வேளாங்கண்ணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ராயபுரத்தில் உள்ள கால்நடை காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.