தண்டையார்பேட்டை: ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக மிதமான வேகத்தில் ரயில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் உயிர் தப்பினர். ஆவடியில் இருந்து இன்று பகல் 11.15 மணியளவில் புறநகர் மின்சார ரயில், சென்னை கடற்கரைக்கு புறப்பட்டது. மதிய வேளை என்பதால் பயணிகள் குறைவான அளவில் ரயிலில் பயணித்தனர்.
ராயபுரம் அருகே வந்தபோது, திடீரென ரயிலின் 3வது பெட்டியில் 2 ஜோடி சக்கரம் தடம் புரண்டது. ரயிலில் இருந்து பயங்கர சத்தம் வந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அதே நேரத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என கருதி டிரைவரும் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி பார்த்தபோது, 2 ேஜாடி சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது தெரியவந்தது. ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகளும் அலறியடித்து கீழே இறங்கினர். நல்ல வேளையாக ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனடியாக ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வந்தனர். பழுதடைந்த சக்கரங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ராயபுரம்-சென்னை கடற்கரை நிறுத்தம் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். அவர்களை போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் மின்சார ரயிலில் பயணம் செய்தவர்கள், சிறிது தூரம் நடந்து சென்று, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோ, பஸ் மூலம் சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
The post ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.