சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக யார் அந்த சார்? என்ற பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கடந்த 29ம் தேதி அதிமுக ஐடி பிரிவு சார்பில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த அண்ணாசாலை போலீசார் முதற்கட்டமாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பத்மநாபன், பூவரசன் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளாத நிலையில் தங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் முகமது ரியாஸ் ஆஜராகினர். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், எந்த வித அனுமதியும் பெறாமால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கினால் மற்ற வணிக வளாகங்களில் போராட்டம் நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, எதிர் காலத்தில் இது போன்று முறையாக அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post ராயப்பேட்டையில் அனுமதியின்றி போராட்டம் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.