லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. 204 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் மும்பை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 61 ரன்கள் தேவையாக இருந்தது.
நவீன கால டி20 கிரிக்கெட்டில் இந்த ரன்கள் அடிக்கப்படக்கூடியதே. ஆனால் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 67 ரன்கள் விளாசிய நிலையில் அவேஷ் கான் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் வழக்கத்துக்கு மாறான ஷாட்டை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. ராதீ வீசிய அடுத்த ஓவரில் 11 ரன்கள் கிடைக்கப்பெற்றன. 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் திலக் வர்மா ரன்கள் சேர்க்க தடுமாறிக் கொண்டிருந்தார். ஷர்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரின் 5-வது பந்தில் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.