சிட்னி டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக இந்திய ஓய்வறையில் குழப்பம் மற்றும் அரசியல் ஏற்பட்டது. ரோஹித் சர்மா உட்காரவைக்கப்பட்ட டிராமா, அவராகவே ஒதுங்கிக் கொண்டதாக ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கிரிக்கெட்டுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் ஆட்டத்தின் மீதும் தாக்கம் செலுத்த, இந்திய அணி கிரீன் டாப் சிட்னி பிட்சில் படுமோசமாக ஆடி 185 ரன்களுக்குச் சுருண்டது.
2001 முதல் சிட்னி டெஸ்ட்களில் 2-வது ஆகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோராகும் இது. 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 127 ரன்களுக்குச் சுருண்டதற்குப் பிறகு இப்போது இந்தியா 185 ரன்கள். அன்று பாகிஸ்தான் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டினாலும் முதல் இன்னிங்ஸ் லீடாக 205 ரன்களைப் பெற்றிருந்தும், 2-வது இன்னிங்சில் 176 ரன்கள் இலக்கைக் கூட எடுக்க முடியாமல் 139 ரன்களுக்குச் சுருண்டது.