சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ரோஹித் சர்மா 0, ரியான் ரிக்கெல்டன் 13, வில் ஜேக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 10 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்து வலுவாக மும்பை அணி இருந்த நிலையில் நூர் அகமதுவின் சுழலில் தோனியின் மின்னல்வேக ஸ்டெம்பிங்கால் சூர்யகுமார் யாதவ் (29) ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா (31), ராபின் மின்ஸ் (3), நமன் திர் (17) ஆகியோரையும் நூர் அகமது பெவிலியனுக்கு திருப்பியதால் மும்பை அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனது.