திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி மாநாடு “ஜாம்புரி” என்ற பெயரில் கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் இருந்து 25 மாநிலங்கள், 4 வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் பங்கேற்றுள்ளனர். நாளை (3ம் தேதி) வரை விழா நடைபெறுகிறது.
விழாவில் தினமும், சாரண-சாரணியர்கள் தங்களது மாநிலத்தின் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர். 6ம் நாளான இன்று காலையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிலையில் சாரணர்களின் வைர விழாவின் நிறைவு விழா இன்று (2ம் தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்; “இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ். இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரை பாராட்ட இந்த ஒரு நிகழ்ச்சி போதாது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கற்றல் மற்றும் பயிற்றுவித்தலை எளிமையாக்க, நவீனமாக்க 80,000 ஆசிரியர்களுக்கு கை கணினி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்; பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டுக்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. நாளைய குடிமக்களான மாணவர்களிடம் சமூக சேவை, உற்று நோக்குதல் ஏற்படுத்துகிறது.
நாட்டுப் பற்று என்பது நிலத்தின் மீது வரும் பற்றல்ல. மக்கள் மீது வரும் பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று. சாரண, சாரணியர் இயக்கம் உலகப் பெரும் இயக்கங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் 80 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 12 லட்சம் பேரும் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ளனர். ரூ.10 கோடியில் சாரண, சாரணியர் புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும்” என முதல்வர் உரையாற்றினார்.
The post ரூ.10 கோடியில் சாரண, சாரணியர் புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.