விழுப்புரம்: “பொங்கலையொட்டி மூன்று நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடலின் சாதனை” என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டு விற்பனையான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி இல்லை. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்தச் செய்தி காட்டுகிறது.