சென்னை: “அமலாக்கத் துறையால் உள்நோக்கத்தோடு, ஆதாரங்கள் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, அது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.1,000 கோடி அளவில் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதில் 13-03-2025 அன்று மாலை சோதனை தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.