புதுடெல்லி: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று (பிப்.1) காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல் வருமான வரி உச்ச வரம்பில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும்போது கூடுதலாக ரூ.75,000 கழிவும் கிடைக்கும். இந்த உயர்வின் மூலம் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும், இது நுகரும் சக்தியை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.