சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டில் ரூ.125 கோடி ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்புகள் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு, 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும். வைட்டமின்கள், நார்ச்சத்துகள், இரும்புச்சத்து, தாது உப்புக்கள் போன்ற சத்துகள் நிறைந்த பழங்களின் சாகுபடி பரப்பானது 12 ஆயிரம் ஏக்கரில் ஊக்குவிக்கப்படும். பந்தல் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 1,200 ஏக்கர் பரப்பில் பந்தல் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட, 2025-26ம் ஆண்டில், பயறு பெருக்குத் திட்டம் 5 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் உழவர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும். புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறுவகைகளை இல்லம்தோறும் வளர்க்கும் பொருட்டு பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு ஒரு லட்சம் இல்லங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து மிகுந்த காளான் உற்பத்தியை பெருக்குவதுடன், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் ஐந்து காளான் உற்பத்திக்கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும். உழவர்கள் தாங்கள் விளைவித்த காய்கனிகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்திட, 4,000 நடமாடும் விற்பனை வண்டிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில், காய்கறிகளின் தேவைக்கேற்ப அவற்றின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தக்காளி, வெங்காயம், முருங்கை, கத்தரி, பச்சைமிளகாய், வெண்டை, கீரை போன்ற முக்கிய காய்கறிப்பயிர்கள் 14 ஆயிரம் ஏக்கரில் பரப்பு விரிவாக்கம் செய்யப்படும். இந்த பரப்பு விரிவாக்கம் பெருமளவு சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு சென்னைக்கான காய்கறித்தேவை நிறைவு செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் துவரையின் பரப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு சீரிய முயற்சிகளால், துவரை பரப்பு, ஒரு லட்சத்து 59 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. துவரை சாகுபடிப் பரப்பு குறைந்து வரும் மாவட்டங்களில், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில், துவரையை தனி பயிராகவோ, வரப்புப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிடுவது ஊக்குவிக்கப்படும்.
The post ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் appeared first on Dinakaran.