சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் திட்டத்தின் பொன்விழா ஆண்டையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருக்கும் சுமார் 26,000 பேருக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
அதன் அடையாளமாக, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 211 கோடி ரூபாய் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்கிடும் வகையில், “தமிழ்நாடு உரிமைகள்” திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமையப் பெறவுள்ளன.
இந்த மையங்களுக்கு நேரடியாக வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு “விழுதுகள்” என்ற முதல் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் மறுவாழ்வு சேவை ஊர்தி, அணுகல் தன்மையுடனும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும்.
அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகள் ஊர்திகளில் வழங்கப்படும். இதை தொடர்ந்து முதல்வர் சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகளை 16 பேருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் “எல்லோருக்கும் எல்லாம்“ என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கி மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த புதிய முன்னெடுப்பாக சென்னை, கே.கே.நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்திற்குள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
The post ரூ.130 கோடி மதிப்பில் 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.