சென்னை: கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.215ல் இருந்து ரூ.349ஆக உயர்த்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த ஆண்டில் ரூ.1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் விவசாயம் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பாரம்பரிய முறைகளை பின்பற்றி வேளாண்துறை வளர்ந்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் 346 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.
* பெருகி வரும் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. உழவர்களின் வாழ்வில் வேளாண் நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கொடுக்கும்.
* மக்காச்சோளம் மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. வளர்ச்சியை கூட்டி மலர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்.
* கடந்த 4 ஆண்டுகளில் 1.86 லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாசன நீர் மின் இணைப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
* 2019-20ல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் அளவு ரூ.1.83 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24ல் பயிர்க்கடன் அளவு 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
* விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இது, வேளாண் பட்டதாரிகளை கொண்டுசெயல்படும்.
* 108 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 21 லட்சம் உழவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
* 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
* 4 ஆண்டுகளில் நெல் விவசாயிகளுக்கு ரூ.1,452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ரூ.1,631 கோடி வழங்கப்ட்டுள்ளது.
* வேளாண் தொழில்முனைவோர் திட்டத்தில் 431 இளைஞர்களை தொழில்முனைவோர்களாக்கி உள்ளோம்.
* டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம்.
* விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* விவசாயிகள் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அதன்படி, 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய வரும் ஆண்டில் மானியம் வழங்கப்படும். கோடை உழவு மானியத்திற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உயர்த்தப்படும்.
* நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* மக்காச்சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் ரூ.40 கோடியில் செயல்படுத்தப்படும்.
* கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சிகளில் ரூ.269.5 கோடியில் செயல்படுத்தப்படும்.
* சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* இயற்கை வேளாண்மை திட்டம் ரூ.12 கோடியில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
* இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
* எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, எண்ணெய் வித்து பயிர் பரப்பினை அதிகரிக்க 7.14 லட்சம் ஏக்கரில் 90,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
* நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய ரூ.160 கோடியில் நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்.
* உழவர்களை கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்க புதிய திட்டம். விவசாயிகளுக்காக உழவரை தேடி வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
* விவசாயத்தில் அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ.55 லட்சம் ஒதுக்கீடு.
* ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
* இயற்கை மரணத்துக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* 63,000 உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு, உற்பத்தியினை அதிகரித்து சர்க்கரை ஆலைகள் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கவும், கரும்பு உழவர்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், 2024-2025 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள உழவர்களுக்கு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், முன் எப்போதும் இல்லாத அளவில் டன் ஒன்றுக்கு ரூ.349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு, டன் ஒன்றிற்கு ரூ.3,500 வழங்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக ரூ.1,168 கோடியில் நுண்ணீர்ப் பாசன திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, 3 லட்சம் ஏக்கரில் துண்ணீர் பாசன வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை. இந்த திட்டம் மூலம் 1.36 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
* தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு.
* 100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் ஆண்டில் 3,000 ஏக்கரில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.6 கோடி ஒதுக்கீடு.
* ரூ.15 கோடியில் 7 விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.
* ரூ.12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.
* ரூ.841 கோடியில் பயிர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* 82 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
* பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். 75 சதவீதம் மானிய விலை காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
* 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீதம் மானிய விலையில் கொய்யா, எலுமிச்சை செடிகளின் தொகுப்பு வழங்கப்படும். தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10.5 கோடியில் கோடைகால பயிர் திட்டம்.
* சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உழவர்களின் நிலங்களில் விதை பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.
* 2,925 கி.மீ. நீள கால்வாய்களை தூர்வார ரூ.13.80 கோடி ஒதுக்கீடு.
* மின் இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ரூ.24 கோடியில் வழங்கப்படும்.
* பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.1.65 கோடியில் அமைக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடியில் முந்திரி வாரியம். பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.
* 4 ஆண்டுகளில் நல்லூர் வரகு, நத்தம் புளி, காரைக்குடி கொள்ளா, கப்பல்பட்டி முருங்கை என 35 வேளாண் விளை பொருளுக்கு புவிசார் குயிறீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* 100 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
* விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* 3 விவசாயிகளுக்கு நம்வாழ்வார் விருது வழங்கப்படும்.
* வேளாண் துறைக்கு இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரூ.1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.215ல் இருந்து ரூ.349ஆக உயர்வு: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் appeared first on Dinakaran.