தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதன் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு கடையில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு விற்பனை செய்யப்படும் பிரியாணியின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் தலைமையில், அந்த துறை அலுவலர்கள், தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியில் உள்ள 20 ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக் கூடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில், பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்கு புறம்பான அம்சங்களோ கண்டறியப்படவில்லை. இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.