பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஸ் ராவல் நடித்த காமெடி படம், ‘ஹெரா பெரி’. மலையாளத்தில் வெளியான ராம்ஜிராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் ரீமேக்கான இந்தப் படம் இந்தியில் வெற்றி பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘பிர் ஹெரா பெரி’ என்ற பெயரில் உருவானது. முதல் பாகத்தில் நடித்த அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஸ் ராவல் நடித்தனர். நீரஜ் வோரா இயக்கினார். இந்தப் படமும் ஹிட்டானது. இதன் 3-ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்யப் பட்டது.
பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஸ் ராவல் நடிக்க ஒப்பந்தமானார்கள். அக்‌ஷய் குமார் தயாரிக்க இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து பரேஸ் ராவல் திடீரென விலகினார். இதனால்,படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் அக் ஷய் குமார் தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் பரேஸ் ராவலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பரேஸ் ராவல், தமிழில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ளார்.