சென்னை: ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த கோரி புகார்தாரர் நல்லதம்பி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து ரூ .70 லட்சம் வரை திருப்பி கொடுத்த ராஜேந்திர பாலாஜி. வாக்குமூலத்தை மாற்றி சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருப்பி கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பான ஆதாரங்களுடன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தும் அதில் மேல் விசாரணை நடத்தவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்ததால் சென்னை உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இதே போல் வேறு ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில் அண்மையில் அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இதே நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.