சென்னை: தமிழ்நாடு சட்சசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் நிறைவாக இரு துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது;
முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ள நீரின் தீவிரத்தை கட்டுப்படுத்ததும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.374.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 8 மாவட்டங்களில் 9 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.184.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மருதம்பள்ளம் கிராமத்தில் சேவகனாறு வடிகாலின் குறுக்கே கடல்நீர் உட்புகுதலை தடுக்கும் பொருட்டு ஒரு கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 2 இடங்களில் படுகை அணை மற்றும் தளமட்டச் சுவர் அமைக்கும் பணி ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கீழ்க்குமிழி அமைக்கும் பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பாசன நிலங்களை எளிதில் சென்றடைய ஆறுகளின் குறுக்கே 8 மாவட்டங்களில் 17 இடங்களில் பாலங்கள் மற்றும் தரை பாலங்கள் அமைக்கும் பணி ரூ.130.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 14 குறு பாசன கண்மாய்களைப் தரப்படுத்தும் பணி ரூ.9.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்ளில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மற்றும் கடற்கரை பாதுகாப்புப் பணிகளுக்கான கடலோர ஒழுங்கு முறை மண்டல அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், 35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அணைகள் மற்றும் அணை பகுதிகளில் உள்ள கட்டுமானங்களைப் பழுதுப் பார்த்தல், பராமரித்தல், புதுப்பித்தல் பணிகள் மற்றும் அதன் தொடர்புடைய உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் 6 மாதங்களில் 13 இடங்களில் ரூ.19 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அணைகள் மற்றும் கதவணைகளின் கதவுகளைப் பழுதுபார்த்தல், அணையின் பிற பழுதுகளைச் சரிபார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் 11 மாவட்டங்களில் 16 இடங்களில் ரூ.149 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 11 மாவட்டங்களில் 48 இடங்களில் நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளில் உள்ள கதவுகளைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் ரூ.21 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
7 மாவட்டங்களில் 11 இடங்களில் வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ.131 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அணைக்கட்டினைப் புனரமைத்து சீரமைக்கும் பணி ரூ.130 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சென்னை மற்றும் அதன் புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும். புவிசார் பாரம்பரிய இடம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் கனிம மேலாண்மை அமைப்பைக் கையாளும் வகையில் ஒரு திட்ட மேலாண்மை அலகு ஏற்படுத்தப்படும். மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 புவி தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்தப்படும். 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டி ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் ரூ.14 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை மென்பொருள் தொகுப்பு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
The post ரூ.374.95 கோடி மதிப்பீட்டில் 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.