சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரூ.38.40 இலட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை திறந்து வைத்தார்.
சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் கீழ் மெரினா கடற்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மெரினா கிளை நூலகம், நூலக நிதியின் மூலம் ரூ.38.40 இலட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரைப் பகுதியில் அவர்களை ஈர்க்கும் வகையிலான முகப்பு பகுதியுடன், நூலகத்தின் சுற்றுச்சுவர் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின் உட்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
நூலகத்தின் முன்புறத்தில் மூங்கில் வளைவுடன் கூடிய பாதை அமைத்து இருபுறமும் வசதியான இருக்கைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலகத்தில் சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், பட விளக்க கதைப்புத்தகங்கள் அடங்கிய comic’s corner அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளை நூலகத்தில் சென்னை நகரம் குறித்த தகவல்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்ளிட்ட 7500 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 1,337 உறுப்பினர்களும், 3 புரவலர்களும் இந்நூலகத்தில் உள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (16.4.2025) திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மெரினா கிளை நூலகத்தின் வளர்ச்சிக்காக தலா 1000 ரூபாய் நிதி வழங்கி நூலகத்தின் புதிய புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்ட 9 நபர்களுக்கு புரவலர் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை பெருநகர மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற ஆளுங்கட்சி துணைத் தலைவர் திரு.ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., பொது நூலகத் துறை இயக்குநர். முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர்.மனுஷ்யபுத்திரன், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.அருண்கிருஷ்ணமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.