காசா: காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவில், இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவும், போரின் கொடூர முகத்தைக் காட்டும் மற்றொருச் சான்று என இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு, பார்லே-ஜி பாக்கெட் 24 யூரோக்களுக்கு மேல் (தோராயமாக ரூ.2,342) விற்கப்படுவதாகக் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அந்தப் பதிவில், "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.