ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய ரயில் தூக்குப்பாலத்தில் ரயில்களை இயக்க கடந்த 2022ல் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கி கடந்தாண்டு இறுதியில் பணிகள் முடிந்தன. புதிய தூக்குப்பாலம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனால், இம்மாத இறுதிக்குள் புதிய பாலத்தில் பயணிகளுடன் ராமேஸ்வரம் வரை மீண்டும் ரயில் சேவையை தொடர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜன. 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கன்னியாகுமரி விரைவு ரயிலில் வந்த பயணிகள் மண்டபத்தில் இறக்கி விடப்பட்ட பிறகு, பயணிகளின்றி, 18 காலி பெட்டிகளுடன் காலை 6 மணிக்கு புறப்பட்ட விரைவு ரயில் சுமார் 60 கிமீ வேகத்தில் புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைந்தது. தூக்குப்பாலத்தை இயக்கியும் பரிசோதிக்கப்பட்டது. அனைத்துவிதமான சோதனைகள் மற்றும் ஆய்வுகள் முடிந்து, புதிய தூக்குப்பாலம் திறப்பிற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், வருகிற 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாகவும், பிப். 11ல் பாம்பன் வரும் பிரதமர் மோடி, புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த ரயிலில் பிரதமர் பயணம் செய்யும் வகையிலும் திறப்பு விழா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதையொட்டி பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இதன்பிறகு பிரதமர் வருகை மற்றும் பாம்பன் பால திறப்பு விழா தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறைப்படி வெளியாகும் எனத் தெரிகிறது.
The post ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்.11ல் பிரதமர் மோடி திறப்பு? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது appeared first on Dinakaran.