*முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி : புதுச்சேரி கல்வித்துறை சார்பில் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.18 ஆயிரம் ஊதியத்துக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் ரொட்டிப்பால் ஊழியர்கள் 917 பேருக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் ஊதிய உயர்வுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.18 ஆயிரத்துக்கான ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், கே.எஸ்.பி.ரமேஷ், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், நிதித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ் ராவ் மோரே, கல்வித்துறை செயலர் ஜவகர், பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, ரொட்டிப்பால் ஊழியர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் நன்றி தெரிவித்தனர். பின்னர் சட்டசபையில் இருந்து வெளியே வந்த கல்வி அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ரொட்டிப்பால் ஊழியர்கள் மலர்தூவி தங்களது மகிழ்வை வெளிப்படுத்தினர். பின்னர், அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. அதனடிப்படையில் கல்வித்துறையில் பணியாற்றிய ரொட்டிப்பால், டிரைசைக்கிள் ஆபரேட்டர்ஸ் ஊழியர்கள், மதிய உணவு கொடுப்பவர் என 917 பேர் நீண்ட காலமாக ஊதிய உயர்வு வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் ரூ.4 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது.
பிறகு, அது ரூ.6 ஆயிரமாகவும், தொடர்ந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கும், ரொட்டிப்பால் ஊழியர்களுக்கும் மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதற்கான அரசாணையானது கல்வித்துறை சார்பில் முதல்வர் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நீண்ட ஆண்டு கோரிக்கை அவர்களுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும் காவல்துறை, கல்வித்துறை, மின்துறை, நிர்வாக சீர்த்திருத்தத்துறை உள்ளிட்ட துறைகளில் பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் ஒருவார காலத்தில் கல்வித்துறையில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது. 152 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.18 ஆயிரம் ஊதியத்துக்கான ஆணை appeared first on Dinakaran.