மீனம்பாக்கம்: ஐரோப்பிய நாடுகளில் பனிப்புயல் காரணமாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகர விமான நிலையத்தில் இருந்து, சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 287 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், மோசமான வானிலை காரணமாக மீண்டும் லண்டனுக்கு திரும்பி சென்றது. அங்கு அவசரமாக தரை இறங்கியது. வானிலை சீரடைந்த பின்பு அந்த விமானம், தாமதமாக சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வழக்கமாக அதிகாலை 5.35 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் காலை 7.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானம் இன்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகி, காலை 11.30 மணியளவில் சென்னைக்கு வந்துவிட்டு, பகல் 1.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் சென்னையில் இருந்து செல்ல 285 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நேற்று இரவே, விமானம் தாமதம் குறித்து, குறுந்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காத பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். அவர்களுக்கு ஓட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
The post லண்டனில் மோசமான வானிலை; சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திரும்பி சென்றது: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.