செங்கம்: தர்மபுரி மாவட்டம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (33), மினிலாரி டிரைவர். இவர் வைக்கோல் லோடு ஏற்றி வருவதற்காக தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த கிளீனர் பிரதாப்(18) சென்றார். மினிலாரி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்றது. அப்போது, எதிரே அரியலூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிக்கு சிமென்ட் கலவை டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அரியலூரை சேர்ந்த ரகு(40) ஓட்டிவந்தார்.
அப்போது, மினிலாரி எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டேங்கர் லாரி மீது நேருக்குநேர் மோதியது. இதில் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் பிரதாப் கருகி பலியானார். படுகாயமடைந்த டிரைவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ரகு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அதிகாலை தூக்க கலக்கத்தில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post லாரிகள் மோதல் தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் கருகி பலி 2 டிரைவர்கள் சீரியஸ் appeared first on Dinakaran.