கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு லாரி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. லாரியை மகாராஷ்டிரா பந்தாப்பூர் பகுதியை சேர்ந்த நாராயணன் (45) என்பவர் ஓட்டி வந்தார். சோளாப்பூரை சேர்ந்த பதாமி (40) என்பவர் கிளீனராக இருந்தார். இந்த லாரி இன்று காலை கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. அந்த வேகத்தில் தடுப்பு சுவரை தாண்டி மறுபுறமுள்ள சாலைக்கு சென்றது.
அந்த நேரம் அவ்வழியாக ஆந்திர மாநிலம் நந்திப்பாளையம் பகுதியில் இருந்து எருமைகள் ஏற்றி கோவை நோக்கி ஒரு லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த அருள்ஜோதி (32) என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன் (42) மற்றும் ஆந்திராவை சேர்ந்த காதர், விஜய், ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அருள்ஜோதி, மணிகண்டன், நாராயணன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் காதர், விஜய், பதாமி, ராஜேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு செல்லும் வழியிலேயே பதாமி உயிரிழந்தார். இதையடுத்து காதர், விஜய், ராஜேஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாரியில் இருந்த 2 எருமை மாடுகள் உயிரிழந்தது. 10க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெங்காய லாரி கவிழ்ந்ததில், சாலையில் வெங்காயம் சிதறிக்கிடந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post லாரிகள் மோதல்:4 பேர் நசுங்கி பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.