திருத்தணி: திருத்தணியில் நேற்றிரவு சாலையோர உயரழுத்த மின் கம்பத்தில் டாரஸ் லாரி மோதியதில் மாநில நெடுஞ்சாலையில் சாய்ந்து நின்றது. அதிரஷ்டவசமாக உயிர் சேதமின்றி தப்பினர். திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் 6 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் டாரஸ் லாரிகள், கட்டு கற்கள், ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் அதிவேகமாக லாரிகள் செல்வதால் சாலை விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திருத்தணி அருகே சூரியநகரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்ற லாரி, மேல் திருத்தணி-பொதட்டூர்பேட்டை கூட்டு சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் சாலையோர உயரழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின் கம்பம் உடைந்து சாய்ந்து நின்றது. இரவு 9 மணி அளவில் சம்பவம் நடந்ததால் யாரும் அந்த வழியாக செல்லவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை தடை செய்து உடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திருத்தணியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”திருத்தணியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
The post லாரி மோதி மின்கம்பம் சாய்ந்தது: திருத்தணியில் நேற்றிரவு பரபரப்பு appeared first on Dinakaran.