லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.
அதேநேரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் இரண்டு பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் இரண்டு சிறிய காட்டுத் தீயை அணைக்கப்போராடி வருகின்றனர். நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயான பாலிசேட்ஸ் விபத்து 23,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவை எரித்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி 14 சதவீதம் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.