கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் முதலாமாண்டு மாணவர் ஒருவரை பேராசிரியர் திருமணம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பேராசிரியை தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவி்த்துள்ளார்.
கொல்கத்தாவில் மாநில அரசுக்கு சொந்தமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்ஏகேஏயுடி) உள்ளது. இங்கு அப்ளைடு சைக்காலஜி துறையின் தலைவராக பெண் பேராசிரியை உள்ளார். இவர் தனது துறையின் முதலாமாண்டு மாணவரை வகுப்பறையிலேயே வைத்து இந்து பெங்காலி முறைப்படி திருமணம் செய்வது போன்ற வீடியோ கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி வெளியானது. ஜூனியர் மாணவரை மூத்த பெண் பேராசிரியை பல்கலை வகுப்பறையில் வைத்தே திருமணம் செய்ததால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அது ஒரு மனோதத்துவ நாடகத்துக்காக போலியாக அரங்கேற்றப்பட்ட திருமணம் என்று பேராசிரியை விளக்கம் அளித்தார்.