சேலம்: வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலம் மாநகரில் ஆகஸ்ட் 15,16,17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், பாஜ அரசை கண்டித்தும் வரும் 9ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றார். கச்சத்தீவை ஒப்படைக்கும்படி மோடி பேசினாரா? அதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தினாரா? என்பதை விளக்க வேண்டும். அதிமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜவினர் மிரட்டல் விடுகின்றனர். யாரிடமும் எதுவும் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சென்று சந்தித்துள்ளார்.
தொடர்ந்து, செங்கோட்டையன் மதுரையில் இருந்து சுரங்கபாதை வழியாக டெல்லிக்கு சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுகிறார். பின்னர் தம்பிதுரை, சண்முகம் பேசுகின்றனர். எப்படியாவது அவர்களை தங்கள் வசம் கொண்டு வரவேண்டும் என்ற மிரட்டல் தொனியில் பாஜ செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு, அவரது சம்பந்தி மீது வழக்கு, அவர் மகன் மீது வழக்கு, அதிமுக பெயரில் வழக்கு, இரட்டை இலை மீது வழக்கு என உள்ளது. இதனை வைத்து பாஜ தலைமை எடப்பாடியை மிரட்டுகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
The post வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் 9ம் தேதி ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.