வேலூர்: வக்பு வாரிய சொத்துக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்தார்.
தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் தீமை தரும் என எதிர்கட்சியினர் கூறியுள்ளனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு இது தேவை என வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவதாக அதிக சொத்துக்கள் வக்பு வாரியத்திடம் உள்ளது. ஏறக்குறைய 9 லட்சம் ஏக்கர் அல்லது 9 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை கண்டறிவதற்கு இந்த சட்ட மசோதா அவசியம் தேவை.