*1,500 கடைகள் அடைப்பு
*ஆட்டோ, கார்களும் இயங்கவில்லை
நெல்லை : வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற கோரி அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆயிரத்து 500 கடைகள் அடைக்கப்பட்டதுடன் ஆட்டோ, கார்களும் நேற்று இயங்கவில்லை.
வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற கோரி அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பு சார்பில் மேலப்பாளையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கட்சிகள் அனைத்து அமைப்புகள் அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாஅத்துக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரசூல் மைதீன் ஆர்ப்பாட்டம் குறித்து பேசி தொகுப்புரையாற்றினார், மேலப்பாளையம் திமுக பகுதி செயலாளர் துபாய் சாகுல் ஹமீது, சுன்னத்துல் ஜமாத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் அப்துல் லத்தீப், உஸ்மான், பரக்கதுல்லா, அக்பர் அலி, நேசம் வாஹித், அப்துல் முத்தலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தில் பாளை சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல்வகாப், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் எம்எல்ஏ அப்துல் சமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன், எஸ்.டி.பி ஐ.கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், மதிமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர்.
இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முத்துவளவன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பாரூக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாநில செய்தி தொடர்பாகளர் ஜமால், நிர்வாகிகள் அப்பாஸ், ஜாபர், கூட்டமைப்பு தலைவர் காசிம் பிர்த்வ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான முஸ்லிம் பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது உஸ்மானி நன்றி கூறினார். ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த போராட்டத்திற்கு மேலப்பாளையம் வணிகர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மேலப்பாளையம் முக்கிய வீதிகள், சந்தை பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்தன. சுமார் 1500 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மேலப்பாளையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதன் காரணமாக மேலப்பாளையம் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பொருட்கள் வாங்க முடியாமலும், போக்குவரத்து வசதி இன்றியும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வணிகர் சங்கத்தினர் கூறுகையில், ‘வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அனைத்து கட்சியினரும் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கம் சார்பில் வியாபாரிகள் 24 மணிநேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.’ என்றனர்.
The post வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறக்கோரி மேலப்பாளையத்தில் அனைத்து கட்சிகள் ஜமாத்துக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.